அரசியலமைப்பாக்க முயற்சி: உண்மையில் நடப்பதென்ன?

அரசியலமைப்பாக்க முயற்சி: உண்மையில் நடப்பதென்ன?

By: Kumaravadivel Guruparan

*Originally published in Thinnakural.

01.01. 2017 அன்று ஞாயிறு தினக்குரலில் வெளி வந்த கட்டுரை.

  • ரணிலால் முன்னறிவித்தல்  இன்றி உருவாக்கப்பட்ட அரசியலமைப்பாக்க சபையின் திடீர் உபகுழு அறிக்கை சொல்வது என்ன?
  • தீர்வு கிடைக்காவிட்டால் மக்கள் ஆச்சரியப்படமாட்டார்கள். ஆனால் தம்மை தமது பிரதிநிதிகள் ஏமாற்றக் கூடாது என்று எதிர்பார்க்கிறார்கள்.
  • அரசியல் தீர்வு முயற்சியில் முன்னேற்றம் இல்லை என்று தெரிந்தும் நீதியை பண்டமாற்றம் செய்யும்  அறவொழுக்கம் தவறிய அணுகுமுறையை எந்த மென்வலுப் போர்வை கொண்டும் போர்த்த முடியாது.
  • ஆயுதப் போராட்டத்திற்குப் பின்னராக ஏற்படும் இந்த ஏமாற்றம் என்பது ஒரு கூட்டு அரசியல் உறக்கநிலைக்கும் நிலையான தோல்வி மனப்பாண்மைக்கும் இட்டுச் செல்லுமோ என்ற கவலை எழுகின்றது. 
jan-1-thinakkural

அரசியலமைப்பாக்க சபையின் (Constitutional Assembly) வழிநடத்தல் குழு (Steering Committee) டிசம்பர் 10 அன்று தனது அறிக்கையை சமர்ர்ப்பித்திருக்க வேண்டும். ஆனால் அறிக்கை பிற்போடப்பட்டது. அதற்குப் பதிலாக அன்றைய தினமே வழிநடத்தல் குழுவின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழிநடத்தல் குழுவின் ஒரு தற்காலிக உப குழு (adhoc sub-committee) ஒன்றின் அறிக்கையை தாக்கல் செய்தார். அரசியலமைப்பாக்க சபை மார்ச் 2016இல் உருவாக்கப்பட்ட போதே வழிநடத்தல் குழு ஸ்தாபிக்கப்பட்டது. அதற்கு 6 உப குழுக்களும் ஸ்தாபிக்கப்பட்டன. அவ்வுபகுழுக்களின் அறிக்கை 19 நவம்பர் 2016 அரசியலமைப்பாக்க சபையில் தாக்கல் செய்யப்பட்டன. இது இப்படியிருக்க ஏன் முன்னர் அறிவிக்கப்படாத ஓர் உபகுழு திடீரென உருவாக்கப்பட்டது என்ற கேள்வி எழுகின்றது. இந்தத் தற்காலிக உப குழுவின் அங்கத்தவர்கள் மூவர் மாத்திரமே. ஒருவர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த. முன்னாள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின்  செயலாளர்; சிறிசேன ஆதரவு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரும் அமைச்சரும். இரண்டாமவர் பிரசன்னன ரணதுங்க. கூட்டு எதிரணி என்றழைக்கப்படும் மகிந்த சார்பு பாராளுமன்றக் குழுவின் அழைப்பாளர்களில் ஒருவர். மூன்றாமவர் வைத்திய கலாநிதி துஷித விஜயமன்ன. ஐக்கிய தேசியக் கட்சியின் தென் மாகாண முன்னாள் எதிர்கட்சித் தலைவரும் தற்போதைய ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும். தமிழ், முஸ்லீம், மலையகத் தமிழ் கட்சிகளை முற்றிலும் புறம் ஒதுக்கி ஜே.வி. பிபையையும் உள்ளடக்காமல் இவ் உபகுழு  உருவாக்கப்பட்டது எவ்வாறு? அதற்கு வழிநடத்தல் குழு அனுமதி அளித்ததா? வழிநடத்தல் குழுவின் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், அமைச்சர் மனோ கணேஷன் ஆகியோருக்கு இவ் உபகுழுவின் உருவாக்கம் பற்றி தெரிந்திருந்ததா? இது தொடர்பில் ஏன் இவர்கள் வாய் மூடி மௌனிகளாக உள்ளனர்?

தென்னிலங்கை / சிங்கள பௌத்த கட்சிகளை மட்டும் உள்வாங்கிய இந்த உபகுழுவால் முன் வைக்கப்பட்டுள்ள யோசனைகள் 13ஆம் திருத்தத்திற்கு மேற்பட்டு அதிகார பகிர்வு தேவையற்றது என்பதாகும். ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அவை வெறுமனே மத்தியும் மாகாணங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள விடயங்களின் பட்டியலில் மாத்திரமே என்று அறிக்கை கூறுகின்றது. எது எவ்வாறிருப்பினும் பாராளுமன்றத்திற்கு அனைத்து விடயங்கள் தொடர்பில் தேசிய கொள்கையை ஆக்கும் உரித்து தொடர்ந்து இருக்க வேண்டும் என்று இவ்வறிக்கை விதந்துரைக்கின்றது. தற்போதைய 13ஆம் திருத்தத்தில் ஆளுநரால் செலுத்தப்படும் அதிகாரங்கள் தொடர்பில் தமக்கு பிரச்சனை இல்லை என வட மாகாண சபை தவிர்ந்த அனைத்து மாகாணங்களும் தெரிவித்துள்ளதாகவும் மாகாண ஆளுநருக்குள்ள அதிகாரங்கள் தொடர வேண்டும் என்றும் அறிக்கை கூறுகின்றது.

ஆக மொத்தம், அரசியலமைப்புக் குழுவின் இந்தத் திடீர் உபகுழுவின் அறிக்கை மூலம் உறுதிப்படுத்தப்படுவது யாதெனில் தென்னிலங்கை கட்சிகளின் ஒருமித்த கருத்து 13ஆம் திருத்தத்திற்கு அப்பால் செல்ல வேண்டிய அவசியமில்லை என்பதாகும். தேவையென்றால் அங்கொன்றும் இங்கொன்றுமாக 13ஆம் திருத்தத்தில் சில திருத்தங்களை செய்து கொள்ளலாம். ஆனால் அடிப்படை கட்டமைப்பு சார் மாற்றங்கள் தேவையில்லை என்பது இவர்களது முடிவாகும். இந்தக் கருத்தொற்றுமை மகிந்த-சிறிசேன-ரணில் வேறுபாடுகளைக் கடந்த ஒரு கருத்தொற்றுமை என்பது கவனிக்கப்பட வேண்டும். இந்த உபகுழுவில் ஐக்கிய தேசியக் கட்சியும் பங்குதாரர். சிறிசேனவின் பிரதிநிதியும் உண்டு. இந்தத் திடீர் உபகுழுவையும் அதன் அறிக்கையையும் ரணில் விக்கிரமசிங்கவின் சாணிக்கியமான, பொது வழக்காற்று மொழியில் சொல்வதாயின் ‘குள்ள நரித்தனத்திற்கு’ சிறந்தவோர் எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

இந்தத் திடீர் உபகுழுவின் தேவை ஏன் எழுந்தது? அதற்குக் காரணம் தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான மத்திய – மாகாண உறவுகள் தொடர்பிலான உப குழுவின் அறிக்கையின் உள்ளடக்கமே. அவ்வறிக்கை இக்கட்டுரையாளர் சார்ந்திருக்கும் அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் விடுத்த ஆய்வுக்குறிப்பில் குறிப்பிட்டிருந்தது போல் சமஷ்டிக்குரிய பண்புகளைக் கொண்ட ஒரு முறைமையை பரிந்துரைத்திருந்தது. ஆளுநரை பெயரளிவிலான அதிகாரங்களைக் கொண்ட ஒரு பதவியாக வலுக் குறைத்தல், அவரது சட்டவாக்க, நிறைவேற்று,  அதிகாரங்களை இல்லாதொழித்தல், மாகாணப் பொதுச் சேவையை முதலமைச்சரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரல், ஒருங்கிய நிரலை ஒழித்தல் போன்ற பல்வேறு முற்போக்கான அம்சங்கள் அதில் உண்டு. ஆனால் அவ்வறிக்கையில் கூட்டு எதிரணியைச் சேர்ந்த அக்குழுவின் அங்கத்தவர்களோ ஜே வி பியின் பிரதிநிதியோ கையெழுத்திடவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டியது. அவ்வறிக்கை வெளிவந்தவுடன் அது சமஷ்டியை உருவாக்கப் போகின்றது என்றும் அது நாட்டை பிளவு படுத்தும் என்றும் சிங்கள பௌத்த அமைப்புக்கள் பிரச்சாரத்தை தொடங்கின. குறிப்பாக சித்தார்த்தன் அறிக்கையை விமர்சித்து பிரத்தியேக அறிக்கையொன்றை மகிந்த ராஜபக்சவே வெளியிட்டார். சமஷ்டி என்ற வார்த்தை சித்தார்த்தன் அறிக்கையில் இல்லாவிட்டாலும் அதற்கு மிக இலகுவாக சமஷ்டி முத்திரையை சிங்கள பௌத்த அமைப்புக்கள் குத்தவும் அதை மறுத்து இல்லை நாங்கள் ஒற்றையாட்சியை கைவிடவில்லை என அமைச்சர்கள் பலர் விளக்கம் அளிப்பதையும் நாம் கவனிக்க வேண்டும். சமஷ்டியா ஒற்றையாட்சியா என்ற பதங்கள் தாங்காமல் உள்ளடக்கத்தில் சமஷ்டியின் பண்புகளோடு வரும் அரசியலமைப்பை சிங்கள மக்களிடம் ‘இதில் சமஷ்டி இல்லை’ என்று சொல்லிக் கொண்டு அவர்களை நம்ப வைத்து நாம் எமது அரசியல் தீர்வைப் பெற்று விடலாம் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் அணுகுமுறையின் நடைமுறைப் போதாமையை சித்தார்த்தன் அறிக்கை மீது முன்வைக்கப்படும் விமர்சனங்கள் சுட்டி நிற்கின்றன.

சித்தார்த்தன் அறிக்கையை ரணிலின் திடீர் உப குழு சமன் செய்து விட்டது. இப்பொழுது மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்தடைந்துள்ளோம். சமஷ்டி என்று பெயர் தாங்காத, வடக்கு கிழக்கு இணைப்பில்லாத, பௌத்தத்திற்கு முன்னுரிமை அளிக்கும், சமஷ்டிப் பண்புகளைக் கொண்ட ஓர் அரசியலமைப்பை ஏற்றுக் கொள்ளலாம் என தமிழர்களின் பாராளுமன்ற தலைமைத்துவம் முடிவு செய்துள்ளது போல் தெரிகின்றது. இதில் அவர்களைப் பொறுத்த வரையில் தொக்கு நிக்கும் கேள்வி ஒற்றையாட்சி என்ற பெயர் அரசியலமைப்பிற்கு இருக்குமா இல்லையா என்பதே. ஒற்றையாட்சி என்ற பதத்தை அரசியலமைப்பில் சேர்ப்பதை ஏற்றுக் கொள்வதாயின் அதற்கு ஒரு ஒடுங்கிய வரைவிலக்கணத்தை கொடுத்தால் ஒற்றையாட்சி என சுய அடையாளப்படுத்தும் ஒரு அரசியலமைப்பை ஏற்றுக் கொள்ளலாம் என கூட்டமைப்பு தலைமை எண்ணுவது போல் இருக்கின்றது. கொழும்பு வாழ் அரசியலமைப்பு நிபுணர்களும் இதை விதந்துரைத்திருக்கின்றனர். இவ்வாறாக ஒற்றையாட்சி என பெயர் தாங்கி வந்தாலும் நடைமுறையில் சமஷ்டிப் பண்புகளைக் கொண்ட ஒரு அரசியலமைப்பை தமிழர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வாதிடப்படுகின்றது. இரண்டு மட்டங்களில் இது பிரச்சனைக்குரியது.

ஒன்று, இலங்கையில் ஒற்றையாட்சி என்பது வெறுமனே ஓர் அரசியலமைப்பு சட்ட விவகாரம் சார்ந்த ஒரு கோட்பாடு அன்று. அது சிங்கள பௌத்த மேலாண்மை அரசியலின் அடிப்படை அரசு கட்டமைப்பு சார் கருத்தியல் நிலைப்பாடும் ஆகும். அரசியலமைப்பு சட்டம் என்பது மற்றைய சட்டங்களை விடவும் கூடுதலாக அரசியலோடு பின்னிப் பிணைந்த ஒன்று. அந்த வகையில் தான் தன்னை ஒற்றையாட்சி அரசு என சுய அடையாளப்படுத்தும் ஓர் அரசியலமைப்பை, அதன் உள்ளடக்கங்கள் வழமையான ஒற்றையாட்சி வகைக்குரியனவையாக இல்லாவிட்டாலும், ஓர் வலுவான ஒற்றையாட்சியாக இருப்பதற்கு வாய்ப்புப்புக்கள் அதிகமாக இருக்கின்றன என நாம் கூறுகின்றோம். அதற்கு காரணம் நான் மேலே குறிப்பிட்ட அரசோடு பின்னிப் பிணைந்திருக்கும் இந்த ஓற்றையாட்சியை நேசிக்கும் கருத்தியலின் செயற்பாட்டால் ஆகும். 13ஆம் திருத்தம் ஒற்றையாட்சிக்குட்பட்டு தோல்வியடைந்தமைக்கு காரணம் அரசியலமைப்பின் உயிர் நாடியாக  ஒற்றையாட்சி இருந்தமையால் என்பது ஞாபகப்படுத்த வேண்டியது. அரசியலமைப்பை சட்ட பொருள்கோடல் செய்யும் போது இந்த ‘அரசியலமைப்பின் உயிர்நாடி’ (spirit of the constitution) என்பதை (நீதிமன்றங்கள்) அடையாளம் காணுவதும் அதை அடிப்படையாக வைத்து அரசியலமைப்பிற்கு விளக்கம் சொல்வதும் முக்கியமானது என்பதை அரசியலமைப்பு சட்டம் அறிந்த அனைவருக்கும் தெரியும். உதாரணமாக இந்தியாவின் அரசியலமைப்பு வெளிப்படையாக தன்னை சமஷ்டி அரசியலமைப்பு எனக் கூறிக்கொள்ளாவிட்டாலும் இந்திய உச்ச நீதிமன்றம் இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டுமானக் கூறுகளில் ஒன்றாக சமஷ்டியை இனங் கண்டுள்ளது. இது அந்நாட்டின் அரசியலமைப்பு சம்பந்தமான பொருள்கோடலில் தாக்கம் செலுத்துகின்றது. ஆகவே தான் ஓர் அரசியலமைப்பு எந்த சொற்களால் தன்னை சுய அடையாளப் படுத்திக் கொள்கின்றது முக்கியமற்றது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் உள்ளது.

இரண்டாவதாக அரசியலமைப்பு அடையாளங்களை தவிர்த்து பார்த்தாலும் எத்தகைய ஒரு முறைமையை நாம் சமஷ்டிப் பண்புகளுடன் கூடிய அரசியலமைப்பாக ஏற்றுக் கொள்ளப் போகின்றோம் என்ற கேள்வி எழுகின்றது. சமஷ்டிக்கான அடிப்படை வரைவிலக்கணம் மத்திய மாகாண அரசாங்கங்கள் தத்தமது மட்டங்களில் மீயுயர்வானவை/ இறைமை உடையவை என்பதாகும். அத்தோடு மாகாணங்கள் / மாநிலங்களுக்கு மத்திய அளவிலும் முடிவெடுத்தலில் பங்குபற்றலையும் சமஷ்டி என்ற எண்ணக்கரு வலியுறுத்தி நிற்கின்றது. 13ஆம் திருத்தத்தில் செய்யப்படும் சில திருத்தங்களையும் ஒரு அதிகாரமற்ற விவாத சபையாக மட்டும் இருக்கக் கூடிய செனட் சபையையும் சமஷ்டியாக ஏற்றுக் கொள்ள முடியாது. அண்மையில் வெளிநாட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த மகிந்த  ராஜபக்ச கூட இப்படியான உப்புச் சப்பற்ற செனட் ஒன்றை உருவாக்குவதற்கு தாம் சம்மதம் எனக் கூறியுள்ளார் என்பதை நாம் கவனிக்க வேண்டும். இல்லாத சமஷ்டியை ஒற்றையாட்சி என அடையாளப்படுத்தப்படும் அரசியலமைப்பிற்குள் தேடுவது வீண் வேலை.

மேற்படி இரண்டு காரணங்களும் அரசியலமைப்பு எவ்வாறு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளுகின்றது என்பதைப் பார்க்க வேண்டாம் (சொற்களைப் பார்க்க வேண்டாம்) அதன் உள்ளடக்கத்தை மட்டும் பாருங்கள் என்று சொல்லும் வாதம் தொடர்பில் நாம் நியாயமான சந்தேகம் கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி நிற்கின்றன.  நிற்க.

அரசியல் தீர்வு முயற்சியில் மற்றுமொரு ஏமாற்றத்திற்கு நாம் எமது சமூகத்தை தயார் செய்ய வேண்டியவர்களாக உள்ளோம். ஆயுதப் போராட்டத்திற்குப் பின்னரான இந்த ஏமாற்றம் என்பது ஒரு கூட்டு அரசியல் உறக்கநிலைக்கும் நிலையான தோல்வி மனப்பாண்மைக்கும் இட்டுச் செல்லுமோ என்ற கவலை எழுகின்றது. ஆயுதப் போராட்டச் சூழலில் பேச்சுவார்த்தைத் தோல்விகள் அரசியல் போராட்டத்தின் முழுமையான தோல்வியாக கருதப்பட  வேண்டிய சூழலாக இருக்கவில்லை. ஆனால் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட சூழலில் மீண்டும் ஒரு அரசியல் ஏமாற்றம் அரசியல் போராட்டத்தின் முழுமையான தோல்வியாக கருதப்பட கூடிய அரசியல் தோல்வி மனநிலை மிஞ்சிய சூழலாக உள்ளது. அடிப்படைகளற்ற எதிர்பார்ப்புக்களை அடிப்படைகளற்ற நம்பிக்கைகள் மீது உருவாக்குவது இத்தகைய கூட்டு சோர்வுக்கே வழிவகுக்கும். என்பதைப் பற்றி எமது அரசியல் தலைமைகள் கொஞ்சமும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.  தீர்வை பெற்றுத் தருவோம் என்று அதீதமாக பெரும் தொனியில் தாம் விடுத்த வாய்ச்  சவாடல்களை நியாயப்படுத்துவதற்காக, மக்கள் மத்தியில் தமது கட்சியின் செல்வாக்கு சரிந்து விடக் கூடாது என்பதற்காக ஒரு தீர்வற்ற அரசியலமைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்வாக மக்களிடம் எடுத்துச் செல்ல முயற்சிக்கக் கூடாது. நாம் பரிந்துரைத்தால் தமிழ் மக்கள் கட்டாயம் அதனை ஏற்றுக் கொள்வார்கள் என்ற துணிவில் கட்டாயம் மக்கள் தீர்ப்பிற்கு விடப்பட்டுத் தான் புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பட வேண்டுமென கூட்டமைப்பு சொல்லி வருகின்றது. இன்று மக்கள் கூட்டமைப்பிடம் எதிர்பார்ப்பது தீர்வை விட நேர்மையைத் தான். என்ன நடக்கின்றது என்ற உண்மையை சொல்ல வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். தீர்வு கிடைக்காவிட்டால் மக்கள் ஆச்சரியப்படமாட்டார்கள். ஆனால் தம்மை தமது பிரதிநிதிகள் ஏமாற்றக் கூடாது என்று எதிர்பார்க்கிறார்கள். இந்த குறைந்த பட்ச எதிர்பார்ப்பையாவது பூர்த்தி செய்வது சனநாயக பொறுப்புக் கூறலுக்கு மிக அத்தியாவசியமானது. தொடர்ந்து சனநாயக தேர்தல் அரசியல் மீது மக்களுக்கு இருக்கும் அவநம்பிக்கையீனத்தை மோசமடையச் செய்யாமல் இருப்பதற்கும் தேவையானது. ஆனால் அரசியலமைப்பு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இருந்தால் ஜெனீவாவில் அரசாங்கத்திற்கு மார்ச் கூட்டத் தொடர்பில் ஆதரவு அளிப்போம் என்று கூட்டமைப்பு அண்மையில் அறிவித்திருப்பது இந்த எதிர்பார்ப்பில் பெரும் ஏமாற்றத்தை தருகின்றது.
suma-virakesari-dec-25

M.A. Sumanthiran, 25 Dec. 2016, Virakesari

முன்னேற்றம் இல்லை என்று தெரிந்தும் நீதியை பண்டமாற்றம் செய்யும் இந்த அறவொழுக்கம் தவறிய அணுகுமுறையை எந்த மென்வலுப் போர்வை கொண்டும் போர்த்த முடியாது. இத்தகைய பண்டமாற்றம் (நீதியா சமாதானமா – நீதியா அரசியல் அதிகாரமா) அடிப்படையில் தவறானது என்பதும் இறுதியில் சமாதானமும் இல்லை நீதியும் இல்லை என்ற நிலைக்கே கொண்டு செல்லும் என்பதும் பல்வேறுபட்ட போருக்குப் பின்னரான சமூகங்களில் இருந்து நாம் பெறுகின்ற படிப்பினை. இந்தப் பண்டமாற்று அணுகுமுறை ஒரு பக்கம் இருக்க கூட்டமைப்பின் இன்னொரு பக்கத்திலிருந்து போராட்ட முரசொலியும் கேட்கத் தான் செய்கின்றது. கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் இவ்வருடம் ஐ. நா செயலாளர் நாயகம் பான் கீ மூனை யாழ்ப்பாணத்தில் வைத்து சந்தித்த பொழுது தமிழர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் அரசியல் தீர்வு கிடைக்காவிட்டால் வடக்கு கிழக்கை இலங்கை அரசாங்கம் ஆள முடியாதவாறு (ungovernable) முடக்கும் ஓர் அறவழிப் போராட்டத்தை முன்னெடுப்போம் என்று சொன்னதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் உத்தியோகபூர்வமாகக் கூறியிருந்தார்கள். தெற்கின் ஆங்கில ஊடகங்கள் வழமையாக மிதவாதப் போக்கோடு பேசும் திரு. சம்பந்தன் அவர்கள் மிகவும் தீர்க்கமாக நிலைப்பாடெடுத்த ஒரு சந்திப்பாக இந்த சந்திப்பை பற்றி அப்போது எழுதினார்கள். இந்த நிலைப்பாட்டில் இருந்து கீழிறங்கி தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தை அரசியல் தீர்வுக்காக பண்டமாற்றம் செய்யும் அணுகுமுறையை கூட்டமைப்பு எடுக்காதிருக்க வேண்டும்.

மிகவும் இக்கட்டான இன்றைய சூழல் முழுத் தமிழ்ச் சமூகமும் அரசியல் பங்களிப்பு செய்ய வேண்டிய காலகட்டம். அரசியல்மயப்படுத்தல் கூர்மை அடைய வேண்டும். கூட்டமைப்பு தவிர்த்த தமிழ்த் தரப்புக்கள் செய்ய வேண்டியவை காய்தல் உவர்த்தல் இன்றி இச்செயன்முறையை கூர்ந்து அவதானித்தலும் அது தொடர்பில் மக்களை அறிவு சார் விழிப்பு நிலையில் வைத்திருப்பதாகும். வழமை போன்றே கட்சி அரசியல் மோதலாக இது இல்லாமல் ஒரு வெளிப்படையான சனநாயக உரையாடலாக நாம் இதனை நடத்த வேண்டும். இதில் சிவில் சமூகத் தரப்புக்களுக்கு கூடுதல் முக்கியமான வகி பாத்திரம் உண்டு. இந்த உரையாடல் தீர்வை இம்முறையும் பெறாதவிடத்து அடுத்த கட்டம் என்ன என்பதனை விவாதப் பொருளாக்கவும் வேண்டும். இது தவறினால் அரசியல் திக்கற்ற சமூகமாக நாம் மாறி விடுவோம்.